தமிழக செய்திகள்

மறப்போம், மன்னிப்போம்... அதிமுக ஒன்றிணைய வேண்டும் - சி.வி. சண்முகம்

அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கட்சியில் இருந்து பிரிந்தவர்கள், நீக்கி வைக்கப்பட்டவர்கள், ஒதுங்கி இருப்பவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

55-வது ஆண்டு தொடக்க விழா

அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை. எஸ்.பி. வேலுமணி கோவையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அம்மாவின் ஆட்சி

அப்போது பேசிய சி.வி. சண்முகம், “அம்மாவால் கட்டிக் காப்பாற்றப்பட்ட இந்த மாபெரும் இயக்கம் 55-வது ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடுகிறது. 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக, இந்தியாவிலேயே தனித்துவம் வாய்ந்த பேரியக்கமாகும். இந்த இயக்கம் மீண்டும் வலிமை பெற வேண்டும் என்பதே தொண்டர்கள் மட்டுமல்லாமல், தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. மீண்டும் எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவின் ஆட்சி மலர வேண்டும்.

மறப்போம், மன்னிப்போம்

அதிமுக வலிமை பெறுவதற்கு அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்தவர்கள், வெளியே சென்றவர்கள், நீக்கி வைக்கப்பட்டவர்கள், ஒதுங்கி இருப்பவர்கள் என அனைவரையும் மறப்போம், மன்னிப்போம். கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல், இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

தவறுகள் இரு தரப்பிலும் நடந்திருக்கலாம். நானும் தவறு செய்திருக்கலாம்; அவர்களும் தவறு செய்திருக்கலாம். அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, ஒரே எண்ணத்துடன் செயல்பட வேண்டும். கோடிக்கணக்கான மக்களை வாழவைத்த இந்த இயக்கம், லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு பதவிகளை வழங்கி அழகு பார்த்த இயக்கம். இந்த இயக்கம் 100 ஆண்டுகள் நிலைத்திருந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

பழைய அதிமுக

சசிகலா உள்பட அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும். யாரையும் விட்டுவிடக் கூடாது. அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். முதலில் தொண்டர்களுக்கு தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

தொண்டர்கள் களத்தில் நம்பிக்கையுடன் பணியாற்றினால்தான் மக்களுக்கும் நம்மீது நம்பிக்கை வரும். அதிமுக பிளவுபடாமல் ஒன்றிணைந்து, வலிமையாக இருக்கிறது; மீண்டும் பழைய அதிமுக உருவாகிவிட்டது என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இதற்காக அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்” என்றார்.

SCROLL FOR NEXT