தமிழக செய்திகள்

‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்

2019-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்களுடைய பணி சிறப்பாக அமைந்தது.

சென்னை

‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, 2005-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'ஊரகப் புத்தாக்கத் திட்டம்' 2021-ல் திமுக ஆட்சியில் 'வாழ்ந்து காட்டுவோம் திட்டமாக' பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மேற்பார்வை அலுவலர்களும், சுமார் 3900-க்கும் மேற்பட்ட தளப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த 400-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் அனைவரும் பட்டதாரிகள் ஆவார்கள். அதில் 90% பணியாளர்கள் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் 2005-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, அதாவது சுமார் 10 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை, தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

முக்கிய பணி

இவர்களுடைய முக்கிய பணி கிராமப் புறங்களில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கு இலவசப் பயிற்சிகளும், துவக்க செயல்பாடுகளுக்காக, துவக்க மானிய நிதி வழங்குதல், கிராமப் புறங்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், நலிவுற்றோருக்கும் அடையாள அட்டை மற்றும் சிறப்பு உதவிகள் வழங்குதல், மக்கள் தொகை கணக்கெடுப்பில் உதவுதல், அடித்தள மக்கள் அமைப்புகளை உருவாக்குதல், இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் நேரடி வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருதல், ஊராட்சிகளில் இ-சேவை மையங்களை அமைத்தல், மைக்ரோ கடன் திட்டங்கள் மூலம் கடன் வழங்கி தொழில் முனைவரை உருவாக்குவது உள்ளிட்ட அரசின் பல கிராமப்புற திட்டங்களை செவ்வனே செயல்படுத்தி பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றனர்.

மகளிர் திட்டப் பணி

குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு வழங்கிய மைக்ரோ கடனில் சுமார் 95 சதவீதத்திற்கு மேல் வெற்றிகரமாக திருப்பிச் செலுத்த வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் இவர்கள் சுமார் 6.50 லட்சம் பயனாளிகளை நேரடியாகத் தொடர்புகொண்டு பணியாற்றி வருகின்றனர் என்று தங்களது கோரிக்கையில் தெரிவித்துள்ளனர். 2019-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்களுடைய பணி சிறப்பாக அமைந்தது. மேலும், இவர்கள் மகளிர் திட்டப் பணிகளையும் கூடுதலாக கவனித்து வருதாக தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' கட்டம் 1-ல், பகுதி 1.0 மற்றும் பகுதி 2.0 ஆகியவை வெற்றிகரமாக செயல்பட்டதைத் தொடர்ந்து, அரசாணை எண் 40, நாள் 13.2.2026-ன்படி வாழ்ந்து காட்டுவோம் திட்டம் விரிவுபடுத்த ஆணையிடப்பட்டது. அதன்படி வாழ்ந்து காட்டுவோம் கட்டம் (பேஸ்) 2, பகுதி 3.0 முன்மொழியப்பட்டது. அரசாணை எண் 40-ன்படி, தற்போதுள்ள பணியாளர்களைக் கொண்டே இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களின் ஊதியத்திற்காக போதுமான நிதி ஒதுக்கப்பட்டதுடன், திட்ட அறிக்கை இறுதி செய்யும் வரை பழைய பணியாளர்களே தொடர வேண்டும் என்றும், புதிய பணியாளர்களை நியமிக்கக்கூடாது என்றும், இப்பணியாளர்களை மகளிர் திட்டத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று இப்பணியாளர்கள் தங்களது கோரிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அரசிடம் கோரிக்கை

இவர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மாநில அளவில் பணிபுரிந்து வந்த அனைவரையும் 23.9.2026 முதல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தாங்கள் பணிபுரிந்து வரும் மாதங்களுக்கு வழக்கம்போல் தொடர்ந்து சம்பளம் வழங்க வேண்டும் என்றும், மேலும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வாழ்ந்து காட்டுவோம் திட்டம் பகுதி 3.0-க்கு விரைந்து ஒப்புதல் வழங்கி நடைமுறைப்படுத்த வேண்டி, இவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம்/வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 10 முதல் 18 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றிய காரணத்தால் அரசுப் பணிகளில் சேர்வதற்கான வயது வரம்பை இவர்கள் கடந்துவிட்டனர். மேலும், இத்துறையிலேயே தங்களது பெரும்பகுதியை கழித்துவிட்டதால், மாற்றுப் பணிகளுக்குச் செல்ல முடியாத இக்கட்டான சூழல் இவர்களிடையே நிலவுகிறது.

அரசு, இவர்களின் இச்சூழ்நிலையை கருத்திற்கொண்டு, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் போதுமான பயிற்சி பெற்றுள்ள இவர்களைத் தொடர்ந்து பணி இடைவெளியின்றி 'வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0-ல்' பணிபுரிய அனுமதிக்க வேண்டுமென்றும் அல்லது மகளிர் திட்டத்தில் இவர்களை இணைத்து பணிப் பாதுகாப்பு வழங்குவதுடன், இவர்களுக்கு வழங்க வேண்டிய இரண்டு மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT