தமிழக செய்திகள்

‘விழித்திரை காப்போம்’... பார்வையை பாதுகாக்க தமிழக அரசின் புதிய திட்டம்!

மண்டல கண் மருத்துவமனை ஒட்டுமொத்த திட்டத்திற்கும் ஒரு தலைமையாக செயல்படும்.

சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ் இன்று (18.09.2016) சென்னை மண்டல கண் மருத்துவமனையில் விழித்திரை காப்போம் திட்டம் குறித்த முன் வெளியீட்டு நிகழ்வை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தொடர்ந்து இம்மருத்துவமனையில் விழித்திரை அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ பயனாளிகளிடம் சிகிச்சை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்ததாவது,

'விழித்திரை காப்போம் திட்டம்'

இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, எழும்பூரில் உள்ள மண்டல கண் மருத்துவமனையில் 'விழித்திரை காப்போம் திட்டம்' என்ற நாட்டிலேயே ஒரு முன்னோடி திட்டத்திற்கான முன் வெளியீட்டு நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

உயர் சிறப்பு சிகிச்சை

இத்திட்டத்தின் நோக்கம் ஆண்டுக்கு ஒருமுறை 30 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரை பரிசோதனை மேற்கொண்டு, ஆரம்ப நிலையிலேயே விழித்திரை மற்றும் பார்வையை பாதிக்கக்கூடிய நோயைக் கண்டறிந்து, அதற்குத் தேவையான உயர் சிறப்பு சிகிச்சை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதுதான்.

தமிழ் நாட்டில் உள்ள 385 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 150 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மண்டல கண் மருத்துவமனை ஒட்டுமொத்த திட்டத்திற்கும் ஒரு தலைமையாக செயல்படும். இதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவு, அதற்கான பயிற்சி மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் வழங்குவதில் இந்த மண்டல கண் மருத்துவமனை முக்கிய பங்கு வகிக்கும். இத்திட்டம் பொதுமக்களை பார்வை பாதிக்கக்கூடிய நோயிலிருந்து பாதுகாக்க உதவும் என மருத்துவம் மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, நேற்றைய முன்தினம் 4 அரசாணைகள் மருத்துவத்துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்கள் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

புதிய செவிலியர் கல்லூரிகள்

அதில் புதிய 7 அரசு செவிலியர் கல்லூரிகள் மற்றும் ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகளில் கூடுதல் மாணாக்கர் இடங்கள் மற்றும் 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,788 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் (Pharmacy) படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் 6,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை உடனடியாக செயல்படுத்தும் விதமாக மருத்துவத்துறையின் சார்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. 16.09.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 261-ன் படி, திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.270.26 கோடி செலவில் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.

கூடுதல் மாணாக்கர் இடங்கள்

அரசாணை எண் 262-ன் படி, கோயம்புத்தூர் ESI மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 60 இடங்கள் கொண்ட செவிலியர் கல்லூரி மற்றும் ஏற்கனவே உள்ள அரசு செவிலியர் கல்லூரிகளில் டிப்ளமோ நர்சிங் (Diploma in Nursing) படிப்பிற்கு 1,290 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். B.Sc. நர்சிங் படிப்பிற்கு 440 கூடுதல் இடங்கள், M.Sc. நர்சிங் படிப்பிற்கு 75 கூடுதல் இடங்கள் மற்றும் Post Basic B.Sc. நர்சிங் படிப்பிற்கு 120 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அரசாணை எண் 263-ன் படி, B.Pharm படிப்பிற்கு 600 கூடுதல் மாணாக்கர் இடங்களை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசாணை எண் 264-ன் படி, 12 வகையான துணை மருத்துவப் படிப்புகளான Bachelor of Optometry, Bachelor of Emergency Medical Technologist, Bachelor of Medical Laboratory Science, Bachelor of Dialysis Therapy Technology, Bachelor of Anaesthesia and Operation Theatre Technology, Bachelor of Medical Radiology and Imaging Technology, Bachelor of Radiation Therapy Technology, Bachelor of Respiratory Technology, Bachelor of Occupational Therapy, Bachelor of Physiotherapy, Bachelor of Physician Associates, Bachelor of Nutrition and Dietetics (Honours) போன்ற 12 துணை மருத்துவப் படிப்புகளுக்காக 1,646 கூடுதல் இடங்களை உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

டெங்கு காய்ச்சலை பொருத்தவரை கடந்த 7 நாட்களில் டெங்கு பாதிப்பு, 14 ஆம் தேதி அன்று 61, 15-ஆம் தேதி 133, 16-ஆம் தேதி 283-ஆக உயர்ந்துள்ளது, 17-ஆம் தேதி 244-ஆகக் குறைந்திருக்கிறது. இது ஒரு பருவகால மாற்றம் தான். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் பொதுமக்கள் ஒத்துழைப்பும் கண்டிப்பாகத் தேவை. மழைநீர் தேங்கும் வகையில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 9 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தினமும் காய்ச்சல் பதிவு விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.உள்ளாட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்பு பணிகளில் ஆட்கள் குறைவு என்றால், கூடிய விரைவில் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பணி நிரந்தரம்

டெங்கு போன்ற சூழலில் உடனடியாகப் பணியாளர்களின் தேவை இருப்பதால், மாவட்ட நலச்சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே முதற்கட்டமாக 2,500 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பரிசோதனை (Fundus screening) கட்டாயமாக்கப்படுவது குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து முடிவு செய்யப்படும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) டாக்டர் வ. லோகநாயகி, மண்டல அரசு கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் விநாயகமூர்த்தி, மாநில கண் பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குநர் டாக்டர் சந்திரகுமார் , அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் டாக்டர் சாந்தாராம் (ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை), டாக்டர் அரவிந்தன் (ஸ்டான்லி அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை), டாக்டர் ஹரிகரன் (ஓமந்தூரார் அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை), டாக்டர் கவிதா (கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT