தமிழக செய்திகள்

பாரதத் தாயின் புகழை உலகெங்கும் பரப்புவோம்: நயினார் நாகேந்திரன்

தமிழக மக்களுக்கு நயினார் நாகேந்திரன் சுந்தந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”அன்னை பாரதத்தின் அடிமை சாங்கிலியை அறுத்து, விடுதலைக் காற்று வீசத் தொடங்கிய 80-ஆம் ஆண்டு விடியலில் நாம் பெருமையுடன் அடியெடுத்து வைக்கிறோம், அகிலமே வியக்கும் வண்ணம், தொன்மைச் சிறப்பும் நவீன வளர்ச்சியும் ஒருங்கே மிளிரும் நமது தேசத்தின் 80-வது சுதந்திர தினத் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதத்தின் விடுதலை வேள்வியில், தியாகத் தீயாகத் தங்களை அர்ப்பணித்த தீரர்களை இவ்வேளையில் போற்றி வணங்குகிறோம்.

அந்நியரின் அடக்குமுறைக்கு அஞ்சாது. செங்குருதி சிந்தி இம்மண்ணைப் புனிதமாக்கிய தியாகச் செம்மல்களின் வீரத்தையும், அறச்சீற்றத்தையும் நாம் ஒருபோதும் மறவோம், அந்த மகத்தான தியாகிகளின் கனவுகள் இன்று நனவாகிக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தீர்க்கதரிசனமான தலைமையின் கீழ், வளர்ச்சியடைந்த பாரதம் (Viksit Bharat) எனும் இலக்கை நோக்கி நமது தேசம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகிற்கே வழிகாட்டும் 'விஸ்வகுரு'வாக இந்தியா மிளிர்வது நமது பிரதமரின் அசாத்திய உழைப்பிற்குச் சான்றாகும். சாமானியர் நலனும், தேசப் பாதுகாப்பும் ஒருங்கே மிளிரும் அவரது புதிய இந்தியா ஒவ்வொரு இந்தியனுக்கும் மட்டற்ற பெருமிதத்தை அளிக்கிறது.

ஜாதி, மத, மொழி கடந்து 'தேசியம்' எனும் மந்திரத்தால் ஒன்றிணைவோம். வலிமையான பாரதத்தை வருங்காலத்திற்கு அளிப்பதே நாம் தியாகிகளுக்குச் செய்யும் நன்றிக்கடன். தியாகிகளின் கனவையும் நமது பிரதமரின் லட்சியத்தையும் நனவாக்க தேசியக் கொடியின் கீழ் அணிவகுத்து. அன்னை பாரதத்தின் புகழை உலகெங்கும் பரப்புவோம்! அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! பாரத் மாதா கி ஜே!”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.