தமிழக செய்திகள்

தென்னிந்திய பகுதி தலைமை கட்டளையிலிருந்து லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி பணி ஓய்வு..!

படைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தார்.

சென்னை,

இந்திய ராணுவத்தின் தெற்குப்பகுதி தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி, தனது நாற்பதாண்டுகால சேவைக்குப்பின் இன்று பணி நிறைவு பெற்றார். தனது பிரியாவிடை நிகழ்வின் ஒரு பகுதியாக, தேச சேவைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் சென்னை போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பல்வேறு பதக்கங்கள் பெற்றவர்

ஜூன் 1987-ல் 16 சீக்கிய இலகு காலாட்படையில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, பின்னர் பாராசூட் சிறப்புப் படைபிரிவில் இணைந்தார். தனது பணிக்காலத்தில், அவர் பல்வேறு நிலப்பரப்புகளிலும் களங்களிலும் செயல்பட்டார். அவரது சிறப்பான சேவைக்காக ஷவ்ரிய சக்ரா, சேனா பதக்கம், அதி விசிஷ்ட சேவா பதக்கம் உள்ளிட்ட பல கவுரவங்கள் வழங்கப்பட்டன.

1977-ல் அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் ஒரு இளம் மாணவராக இருந்து, ராணுவ தென் பகுதியின் தலைவராக உயர்ந்த அவரது பயணம், ஒழுக்கம், விடாமுயற்சி, தொழில்திறன், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சான்றாகும்.

ராணுவ தென் பகுதியின் தளபதியாக இருந்த காலத்தில், லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, பாதுகாப்புப் படைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தார்.

ஒலி-ஒளிக்காட்சி நிகழ்ச்சிகள்

சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் பொதுமக்களின் ஈடுபாட்டை அதிகரிபதில் அவர் சிறப்பு கவனம் செலுத்தினார். டி-55 பீரங்கி மற்றும் ஐ.என்.எஸ் விக்ராந்த், ஐ.என்.எஸ் அஞ்சதீப் ஆகிய கடற்படைக்கப்பல்களின் மாதிரிகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. குடிமை நிர்வாகத்திற்கும் ஆயுதப் படைகளுக்கும் உள்ள ஆழமான உறவை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் தீவிர ஒத்துழைப்பு மற்றும் ஆதரவால் இந்த முன்னெடுப்புகள் மேலும் வலுப்பெற்றன.

சென்னை போர் நினைவிடத்தில் தமிழ் தலைப்புகளுடன் கூடிய ஒலி-ஒளிக்காட்சி நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலையில் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன. இந்த முயற்சி குடிமக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர், இந்திய வீரர்களின் தியாகங்களைப் புரிந்துகொள்ளவும், ஆயுதப் படைகளின் மீது ஆழ்ந்த மதிப்பை வளர்த்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, அவசரகாலத் தயார்நிலை, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) போன்ற துறைகளில் பாதுகாப்புப்படைகள், அரசு, தனியார் துறை போன்றவற்றுடன் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார். முன்னாள் ராணுவ வீரர்களின் நலன், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர் சிறப்பு கவனம் செலுத்தினார்.

வாழ்த்துகள் தெரிவிப்பு

இந்திய ராணுவ தென்பகுதி தலைமையக அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், இதர நிலையினர், சிவில் பணியாளர்கள் ஆகியோர், லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரிக்கு அவரது அர்ப்பணிப்புடன் கூடிய நாற்பதாண்டு சேவைக்கு மரியாதை செலுத்தியதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நிறைவான பணிக்குப் பிந்தைய வாழ்க்கை அமைய தங்கள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT