தாம்பரம்,
மகனை தன்னுடன் அனுப்ப மறுத்த கணவரின் காலை, ரூ.3.5 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி உடைத்த மனைவி கைதானார்.
சென்னை தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 42). இவருக்கும், வசந்தா (40) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற் றது. இவர்களுக்கு கவிதரன் (11) என்ற மகன் உள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வசந்தா, கணவரை பிரிந்து சென்றார். பின்னர் ஆட்டோ டிரைவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஓரத்தூரில் வசித்து வந்தார். இதனால் மகனுடன் தாமோதரன் வெங்கம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மகனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வசந்தா கேட்டதாகவும், அதற்கு தாமோதரன் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி தாமோதரனின் செல்போனுக்கு தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர், "உங்களுக்கு பார்சல் வந்துள்ளது. முகவரியை கூறுங்கள், நேரில் வந்து தருகிறேன்" என்று தெரிவித்தார்.
இதனை நம்பி முகவரியை கூறிய தாமோதரன், வீட்டின் வெளியே வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் அவரை கீழே தள்ளி, இரும்பு பேஸ்பால் மட்டையால் வலது காலில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் தாமோதரனின் கால் எலும்பு முறிந்தது. அவர் தாம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, சென்னையைச் சேர்ந்த பரத் (19), அகஸ்டின் (19) ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
2 மாதங்களுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கிய அவர்களிடம் நடத்திய விசா ரணையில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பொன்மணி (32) என்ற ரவுடி தாக்குதலுக்காக பணம் கொடுத்தது தெரியவந்தது. பின்னர் பொன்மணியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தாமோதரனின் உயிருக்கு சேதம் ஏற்படாமல் அவரது கால்களை மட்டும் உடைக்க வேண்டும் என அவரது மனைவி வசந்தா ரூ.4 லட்சம் பேரம் பேசி, ரூ.3.5 லட்சம் கொடுத்ததாக தெரியவந்தது.
இதையடுத்து பொன்மணி மற்றும் வசந்தாவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தாமோதரனை கூலிப்படையினர் தாக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.