தமிழக செய்திகள்

சென்னையில் ஓய்வுபெற்ற ராணுவ ஊழியரை கொன்ற காவலாளிக்கு ஆயுள் தண்டனை

சென்னை ஓய்வு பெற்ற ராணுவ ஊழியர் ஒருவர், காவலாளி ஒருவரின் மனைவியிடம் அடிக்கடி பேசி வந்ததை அந்த காவலாளி கண்டித்துள்ளார்.

சென்னை பெரம்பூரை சேர்ந்த வேங்கடசாமி (வயது 64), ராணுவத்தில் பதிவு எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அதே பகுதியில் அவரது வீட்டின் எதிரில் வசிப்பவர் துளசையா(54). இவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அக்கம்பக்கத்தில் அனைவரும் நட்புடன் பழகி வந்திருந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் வேங்கடசாமி, துளசையாவின் மனைவியிடம் அடிக்கடி பேசி வந்ததை அவர் கண்டித்தார். இருப்பினும் தொடர்ந்து பேசி வந்ததால் அவர் ஆத்திரம் அடைந்தார். இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி வீட்டின் முன்பு வேங்கடசாமி நின்று கொண்டிருந்தார்.

அப்போது இந்த விவகாரத்தில் தகராறு ஏற்பட்டது. மேலும் வேங்கடசாமியை கத்தியால் குத்தி துளசையா கொலை செய்தார். இதுதொடர்பாக திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துளசையாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கினார். இதில் துளசையாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், ரூ.10 ஆயிரம் அபராத தொகையும், அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாநகர குற்றவியல் வக்கீல் தேவராஜன் ஆஜராகி வாதாடினார்.