வண்டலூர்,
சென்னை வண்டலூரில் அமைந்துள்ள இந்த பூங்கா சுமார் 1,260 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது.
150-க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் மற்றும் முதலை, பாம்பு, ஆமை உள்ளிட்ட பல்வேறு ஊர்வன இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முக்கிய பொழுதுபோக்கு மையமாக வண்டலூர் உயிரியல் பூங்கா விளங்குகிறது. பாதுகாப்பான வாகனங்களில் பயணித்து சிங்கம், புலி போன்ற விலங்குகளை அருகில் இருந்து பார்க்கும் வசதி உள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
இந்தநிலையில் சிங்கங்கள் மற்றும் மான்கள் உலாவும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் சபாரி சேவை வருகிற 14-ந்தேதி முதல் 20 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் சபாரி சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், சேவை தொடங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.