விருதுநகர்,
60 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கவால் குரங்குகளை கணக்கெடுக்கும் பணி வருகிற ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது. இப்பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் என அழைக்கப்படுகிறது. இங்கு யானைகள், புலி, சிறுத்தை, மான், காட்டு எருமை, காட்டுப்பன்றிகள், ராஜ நாகங்கள் உள்பட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
அதேபோல இங்கு எண்ணற்ற சிங்கவால் குரங்குகள் வாழ்கின்றன. ஆண்டுதோறும் பறவைகள், யானைகள் உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.
ஆனால் சிங்கவால் குரங்குகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இதையடுத்து தற்போது மீண்டும் கணக்கெடுக்கும் பணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி வருகிற ஜனவரி மாதம் நடக்க உள்ளது. இந்த பணியில் வனத்துறை அதிகாரிகள், சமூக வன ஆர்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
சிங்கவால் குரங்குகள் ஸ்ரீவில்லிபுத்தூர், தாணிப்பாறை, சதுரகிரி மற்றும் செண்பகத்தோப்பு மலைப்பகுதியில் அதிக அளவு வசித்து வருகின்றன. மேற்கண்ட தகவலை வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.