சென்னை,
நவம்பர் 1-ந்தேதி முதல் மதுபாட்டில்கள் விலை ரூ.10 உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மதுபாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக ரூ.10 விதிக்கப்பட்டுள்ளதால், நவம்பர் 1-ந்தேதி முதல் மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.10 உயர்கிறது. பீர், ஒயின், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மதுபானங்கள் என அனைத்து வகை மதுபானங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும். இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைகளின்படி, மனித நுகர்வுக்கான மதுபானங்கள் விற்பனையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள், பீர், ஒயின், பிற மாநில மதுபானங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் உள்ளிட்ட அனைத்து வகைகளின் அதிகபட்ச சில்லறை விலையும் நவம்பர் 1-ந்தேதி முதல், அனைத்து அளவிலான பாட்டில்களுக்கும் ரூ.10 உயர்த்தப்படுகிறது. இந்தக் கட்டண விதிப்பால் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலையுடன், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களின் விலையும் திருத்தப்படுகிறது.
டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து எப்.எல்.2 உரிமம் பெற்ற மதுக்கூடங்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களின் விலையும், சில்லறை விற்பனைக் கடைகளின் விலைக்கு இணையாக உயர்த்தப்படுகிறது. மதுபான உற்பத்தியாளர்கள், திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை அனைத்து வரிகளும், ரூ.10 கட்டணமும் அடங்கிய விலை எனக் குறிப்பிட்டு பாட்டில்களின் விலைச் சீட்டுகளில் அச்சிட வேண்டும்.
உற்பத்தி ஆலைகள், டாஸ்மாக் மொத்த விற்பனைக் கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் இருப்பில் உள்ள மதுபாட்டில்களிலும் திருத்தப்பட்ட விலைச் சீட்டுகளை ஒட்ட வேண்டும். நவம்பர் 1-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும் அனைத்து மதுபானங்களிலும் திருத்தப்பட்ட விலைச் சீட்டுகள் இடம்பெற்றிருக்க வேண்டும். இதனை அனைத்து உற்பத்தியாளர்களும், வினியோகஸ்தர்களும் உறுதி செய்து, உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.