தமிழக செய்திகள்

இரவில் மதுப்பிரியர்கள் கூடாரம்: திருப்பூர் மார்க்கெட் கடைகள் தகடுகளால் அடைப்பு

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை மக்கள் பாராட்டினர்.

திருப்பூர்,

திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இன்னும் திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. இந்த கடைகளை ஏலம் விடுவதில் குளறுபடி நிலவுவதால் திறப்பு விழா தள்ளிப்போவதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினத்தந்தி செய்தி எதிரொலி

இதன்காரணமாக இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் கூடாரமாக இந்த தினசரி மார்க்கெட் கடைகள் மாறிப்போனது. மார்க்கெட்டின் முன்புறம் உள்ள கடைகளுக்கு கதவுகள் எதுவும் இல்லாததால் இரவு நேரங்களில் சாலையோரவாசிகள், மதுப்பிரியர்கள் இந்த கடைகளுக்குள் சென்று தங்குவது, தகாத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்தது.

எனவே இதுகுறித்து `தினத்தந்தி'யில் செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக தினசரி மார்க்கெட் முன்புறம் உள்ள கடைகளில் இரும்பு தகடுகளை கொண்டு யாரும் உள்ளே செல்லாத வகையில் அடைக்கப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை மக்கள் பாராட்டினர்.