தமிழக செய்திகள்

16-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுகத் தீர்த்தவாரி வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை,

கடைமுகத் தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

துலா உற்சவம்

மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக நிகழ்வாகும். காவிரி ஆற்றின் துலாக்கட்டத்தில் புனித நீராடுவது பாவங்களைப் போக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதற்குப் பின்னணியில் சுவாரஸ்யமான புராண வரலாறும் கூறப்படுகிறது.

மக்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமையின் காரணமாக கங்கை உள்ளிட்ட ஜீவநதிகள் கருமை நிறம் அடைந்ததாகவும், அவை மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டு தங்களது பாவங்களைப் போக்கிக்கொண்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடைமுக தீர்த்தவாரி

இந்த உற்சவத்தின்போது மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காவிரி துலாக்கட்டத்திற்கு கொண்டுவரப்படுவர்.

அங்கு நடைபெறும் தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். நடப்பாண்டுக்கான துலா உற்சவம் ஐப்பசி மாதம் முதல் தேதியில் தொடங்கியது. இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி நவம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ளது.

சனிக்கிழமை பணி நாள்

இந்நிலையில் அன்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 21-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வழக்கமான செயல்பாடுகளில் மாற்றம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காகவும், விழாவில் பொதுமக்கள் பங்கேற்க ஏதுவாகவும் மாவட்ட நிர்வாகம் இந்த உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT