தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல் அமைச்சர் விஜய் கடந்த 10 ஆம் தேதி இரவு லண்டன் புறப்பட்டு சென்றார். 6 நாள் பயணமாக லண்டன் சென்ற முதல் அமைச்சர் விஜய்க்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி முதல்-அமைச்சர் விஜய், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்காக புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு உலகப் புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேசையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையே நேற்று இரவு விஜய், தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்து லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.
விஜய் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து கிளம்பும் போது அவரைக்காண ஏராளமன ரசிகர்கள் காத்திருந்தனர். ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்த முதல் அமைச்சர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். சிலருக்கு ஆட்டோகிராப்பும் போட்டு கொடுத்தார்.. லண்டனில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல் அமைச்சர் விஜய், இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க த.வெ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.