தமிழக செய்திகள்

முதுமையில் தனிமை; மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே மூதாட்டி ஒருவர், கூலி வேலை செய்து கொண்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே முடுக்குமீண்டான்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (வயது 82). இவரது கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். மகன்களுக்குத் திருமணமாகி வெளியூரில் வசித்து வரும் நிலையில், பேச்சியம்மாள் மட்டும் கூலி வேலை செய்து கொண்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

சரிவர நடக்க முடியாத நிலையிலும், உதவிக்கு ஆள் இல்லாததாலும் அவர் வாழ்க்கையில் மிகுந்த விரக்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் கொடுத்து வந்த உணவையே அவர் சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று விரக்தியின் உச்சத்தில் இருந்த பேச்சியம்மாள் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரது வீட்டிற்கு ஓடிச் சென்று தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், உடல் கருகி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மூதாட்டியின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.