தமிழக செய்திகள்

லாரி ஓட்டுநர் தலை துண்டித்து படுகொலை: உறவினர்கள் போராட்டம்; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தென்காசியில் லாரி ஓட்டுநரின் தலையை துண்டித்து படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகிலுள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, லாரி ஓட்டுநர். இவருக்கு இசக்கலை என்ற மனைவியும், மிதுன்ராகுல் என்ற மகனும், அனன்யா என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மாரிமுத்து தனது மோட்டார் சைக்கிளில் பொய்கை பகுதிக்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

லாரி ஓட்டுநர் தலை துண்டித்து கொலை:

அங்கிருந்த ஒரு பள்ளிக்கூடம் அருகே கருப்பன்கோவில் வழியாக வந்தபோது, அவரை ஒரு மர்ம கும்பல் வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் மாரிமுத்துவின் தலையை அரிவாளால் வெட்டித் துண்டித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. மதன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன், அலெக்ஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த மாரிமுத்துவின் செல்போனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம்:

கொலை செய்தியறிந்து மாரிமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், "இதற்கு முன்பும் கரடிகுளம் - ஆவுடையாபுரம் பகுதியில் தொடர்ந்து மர்மமான முறையில் இரண்டு நபர்கள் இறந்து கிடந்தனர். அதுகுறித்து காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மாரிமுத்துவை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாமல் உடலை எடுக்க விடமாட்டோம்" என ஆவேசத்துடன் கூறினர்.

மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு:

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கொலை நடந்த இடத்திற்கு அருகில் 100 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. அங்கு மக்கள் நடமாட்டம் இருந்ததால், குற்றவாளிகள் குறித்து ஏதேனும் தகவல் கிடைக்குமா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பெற்று, தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.