மதுரை மாவட்டம் செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்துள்ளார். தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். லாரி டிரைவராகப் பணியாற்றி வரும் இவர் கம்பத்தில் இருந்து லாரியில் ஏலக்காய் லோடு ஏற்றிச் சென்றுள்ளார்.
லோடு ஏற்றிச் செல்லும் வழியில் லாரி திடீரென தீப்பிடித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க செக்காணூரணி காவல் நிலையத்திற்கு லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் வருகை தந்துள்ளார்.. பாலகிருஷ்ணன் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவரைக் காவல் நிலையத்திலேயே வைத்திருக்க தேனி போலீசார் கூறியதாகச் சொல்லப்படுகிறது. லாரி தீ பிடித்ததி சந்தேகம் இருப்பதாக லாரி உரிமையாளரும் புகார் கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாலகிருஷ்ணன் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கப்பட்ட நிலையில், இரவில் காவல் நிலைய கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டதா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே லாரி டிரைவர் உயிரிழப்புக்குக் காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று தென் மண்டல ஐஜி விஜேயந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.