தமிழக செய்திகள்

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய லாரி கவிழ்ந்து விபத்து!

100 சாக்கு மூட்டைகளில் உள்ள 6 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்றதாக கூறப்படும் 6 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கோட்டைக்கருங்குளம் மெயின் ரோட்டில் நேற்று காலை கேரள பதிவெண் கொண்ட லாரி ஒன்று மன்னார்புரம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ்சிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது லாரியில் சுமார் 100 சாக்கு மூட்டைகளில் 6 டன் எடையுள்ள ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக சிவில் சப்ளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் லாரி மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவில் சப்ளை சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.