திண்டுக்கல்,
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருடைய மனைவி சுகந்தி, மென்பொருள் பொறியாளரான ஜெயபிரகாஷ் கடந்த 20 ஆண்டுக ளுக்கு முன்பு குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்தார். இந்த தம்பதிக்கு சாம்ராட் (வயது 36) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சாம்ராட் அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார்.
இந்தநிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பியாங்கா (34) என்பவர் தனது குடும்பத்துடன் அமெரிக்கா நாட்டின் குடியுரிமை பெற்று, அங் குள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் வசிக்கிறார். இவர், தனியார் துறையில் வேலை பார்க்கிறார். இவர் வேலை தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு சென்ற போது. சாம்ராட்டுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறினர்.
பின்னர் தங்களது பெற்றோரிடம் காதல் விவகாரத்தை தெரிவித்தனர். அவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். அப்போது தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சாம்ராட் குறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர், தமிழ் கலாசார முறையில் திருமணத்தை நடத்த விருப்பம் தெரிவித்தனர். இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த சாம்ராட் குடும்பத்தினரும் அதற்கு சம்மதித்தனர்.
தொடர்ந்து மணமகள் தரப்பில் முக்கிய உறவினர்கள் மற்றும் சாம்ராட் குடும்பத்தினர் அமெரிக்காவில் இருந்து திண்டுக்கல் வந்தனர். தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள சாம்ராட் உறவினர்களை அழைத்து திருமணத் துக்கான தேதி குறிக்கப்பட்டது. அதன்படி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாம்ராட், பியாங்கா ஆகியோருக்கு தமிழ் கலாசார முறைப்படி திருமண சடங்குகள் நேற்று நடந்தது.
அப்போது மணமகன் காசி யாத்திரை செல்லுதல், பாத பூஜை செய்தல், மணமக்கள் மாலை மாற்றுதல், மணமகளுக்கு மணமகன் மெட்டி அணிவித்தல் போன்ற தமிழர் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் பட்டு சேலை அணிந்து வந்த மணமகள் பியாங்காவுக்கு மஞ்சள் கயிற்றில் தாலி கட்டி சாம்ராட் திருமணம் செய்து கொண்டார்.