தமிழக செய்திகள்

பொதுத்தேர்தலைவிட இடைத்தேர்தலில் குறைவான வாக்குப்பதிவு: என்ன காரணம்..?

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை,

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் பொதுத்தேர்தலைவிட குறைவான வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தனர்.

இதையடுத்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மதுராந்தகம்

இதில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி உள்பட 27 பேர் போட்டியிட்டனர். மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 285 வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டிருந்தன.

நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு தொடங்கும் முன், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவை, வாக்குச் சாவடி அலுவலர்கள் நடத்தினர். இதையடுத்து வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வமுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தனர். வாக்குச்சாவடி முன்பு ஆண்கள், பெண்கள் தனித்தனி வரிசை யில் நிறுத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்தது. வாக்குப்பதிவு சதவீதம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியிடப்பட்டது. இதில் படிப்படியாக வாக்கு சதவீதம் அதிகரித்தது. மதியத்திற்கு பின் மாலையில் மக்கள் அதிகம் வந்தனர். மதுராந்தகம் பகுதிகளில் நேற்று வெயிலின் தாக்கம் கொஞ்சம் இருந்தது. இருப்பினும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமாக வந்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.

நிறைவாக மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

தாராபுரம்

இதேபோல் தாராபுரம் தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 306 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 285 பேர் ஆண்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 13 பேர் பெண்களும், 8 பேர் 3-ம் பாலினத்தவர்களும் இருந்தனர்.

இங்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே போட்டியிட்டு பதவியை ராஜினாமா செய்த சத்தியபாமா, த.வெ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் பானுமதி, தி.மு.க. சார்பில் சுகன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் உள்பட மொத்தம் 22 பேர் களத்தில் இருந்தனர்.

மொத்தம் 320 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஒரு சில வாக்குச்சாவடிகளை தவிர மற்ற வாக்குச்சாவடிகளுக்கு பொதுமக்கள் ஆர்வமாக வந்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

காலை 11 மணி அளவில் சுட்டெரித்த வெயில் காரணமாக வாக்காளர்கள் வருகை மந்தமாக இருந்தது. இதனால் பல இடங்களில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இருப்பினும் மதியம் 1 மணி நிலவரப்படி 56.09 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்முறை வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.

80.31 சதவீதம்

வெயில் தாக்கம் குறைந்ததால், மாலையில் வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்களித்தனர். இதனால் அவர்கள் வாக்குச்சாவடிகளின் முன்பு, நீண்ட வரிசையில் நின்று வாக்களித்ததை காணமுடிந்தது. சில இடங்களில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு அரங்கேறியன. ஆனால் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

மாலை 6 மணி நிலவரப்படி 80.31 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த ஏப்ரல் மாதம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 89.92 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

வாக்கு சதவீதம் குறைந்தது - என்ன காரணம்..?

மதுராந்தகம் தொகுதியில் இந்த இடைத்தேர்தலில் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த பொதுத்தேர்தலில் 93.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. எனவே கடந்த பொதுத்தேர்தலைவிட இப்போது 6.96 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தாராபுரத்திலும் கடந்த பொதுத்தேர்தலில் பதிவானதைவிட இந்த இடைத்தேர்தலில் 9.61 சதவீதம் குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு தொகுதிகளிலும் இளைஞர்கள், மாணவர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் பல மாணவர்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் படிப்பதால், அவர்களும் வாக்களிக்கவில்லை. இதனால்தான் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அதன்பின் வாக்குச்சாவடி அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் 'சீல்' வைத்தனர். பின்னர் அதனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றி, மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணும் மையமான ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதேபோல் தாராபுரத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இரு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (9-ந்தேதி) நடக்கிறது.

SCROLL FOR NEXT