திண்டுக்கல்
திண்டுக்கல்லில் விபத்தில் சிக்கிய சொகுசு காரில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டி 4 வழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து பெங்களூருவை நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரை நாராயணன்லால் (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார்.
விரைவாக சென்ற அந்த கார் முன்னால் சென்ற நாகம்பட்டியை சேர்ந்த முத்துராஜா (வயது 44) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோவின் பின்பகுதியில் மோதியது. பின்னர் அந்த வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரை தாண்டி கரூர்-திண்டுக்கல் சாலையில் சென்றது. அப்போது, நாமக்கல்லில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் முத்துராஜா, சரக்கு வாகன டிரைவர் கருப்பசாமி (வயது 35), சரக்கு வாகனத்தில் இருந்த கணபதி (வயது 35), பாலமுருகன் (வயது 34), கார் டிரைவர் நாராயணன்லால் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து பற்றி அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை சோதனையிட்டனர். இதில், அந்த காரில் ரூ.5 லட்சத்து 49 ஆயிரம் இருந்தது. இதனையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவும் செய்தனர். விபத்து மற்றும் பணம் குறித்து வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.