தமிழக செய்திகள்

ரூ.1.44 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் மா.சுப்பிரமணியன்

நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றி தந்த அமைச்சருக்கு, பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து நன்றியினைத் தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (12.03.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 1.44 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-140, மேற்கு மாம்பலம், எல்லையம்மன் கோவில் தெருவில் 140வது வார்டு மாமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16ஆம் நாள் காரிய மேடையினைத் திறந்து வைத்தார். இந்த 16 ஆம் நாள் காரிய மேடை 452 சதுர அடி பரப்பளவில்அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,

வார்டு-140, கோடம்பாக்கம் சாலையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 140வது வார்டு மாமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில், அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கத்தினை திறந்து வைத்தார். இந்த திறந்த வெளி அரங்கம் சுமார் 2460 சதுர அடி பரப்பளவில் 500 மாணவர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கூட்டம் நடைபெறுவதற்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

பின்னர், வார்டு-139, மேற்கு ஜோன்ஸ் சாலையில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ரூ.73.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன ஸ்டெயின்லெஸ் கூரையுடன் அமைக்கப்பட்ட மேற்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தினை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கழிவறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காண்ப்பு கேமிராக்கள், இழுவிசை மேற்கூரை, பயணிகள் இருக்கைகள், நடைபாதை, மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 242 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் மூலமாக ஒரு மாதத்திற்கு சுமார் 3,54,841 பயணிகள் பயன்பெறுவர்.

இதனைத் தொடர்ந்து, வார்டு-142, கொத்தவால் சாவடி தெருவில், ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு ஒளிரூட்டினார்.‘

பின்னர், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வார்டு-142க்குட்பட்ட, விநாயகபுரம், ரத்தினத்தோட்டம் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ரூபாய் 17.50 லட்சம் மதிப்பீட்டில் 250 kw புதிய மின்மாற்றியினைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றி தந்த அமைச்சருக்கு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து தங்கள் நன்றியினைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி (கோடம்பாக்கம்), ஆர்.துரைராஜ் (அடையாறு) மாமன்ற உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், எம்.ஶ்ரீதரன், மதன்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.