தமிழக செய்திகள்

மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு ஏந்தவொரு அனுமதியும் வழங்கக்கூடாது என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு ஆரம்ப நிலையில் இருந்தே ஆட்சேபித்து, எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. காவிரி நதிநீர் தவா நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும், சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பும் காவிரி ஆற்றிலும், அதன் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்புடைய மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு மாநில அரசும் எந்தவித முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என தெளிவுபடக் கூறியுள்ளது.

இதன்படி கர்நாடக அரசு காவிரி தொடர்பாக மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சி குறித்தும், அதன் முழுமையான விபரங்களை ஆற்றின் கடைமடைப் பகுதிகளான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு தெரிவித்து, அவைகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகு தான் நடவடிக்கையை தொடங்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு பிடிவாதமாக மேகதாது அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டி வருகிறது. கர்நாடக மாநில அரசியல் தலைவர்களும் தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பேசி வருகின்றனர்.

இந்தச் சுழலில் 19.06.2026 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏந்தவொரு அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தும் தீர்மானம் முதல்-அமைச்சரால் முன் மொழியப்பட்டு, அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்த அடிப்படையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி வரிசையில் இறுதியாகப் பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் “மேகதாது அணை கட்டும் பிரச்சினையை தனி ஒரு தண்ணீர் பகிர்வு பிரச்சினையாகக் கருதி, மாநிலங்களிடையே நதி நீர் தவா சட்டம் 1956 -ப்படி தனி நடுவர் மன்றம் அமைக்கும் படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்” என்ற தகவலைத் தெரிவித்து அதனையும் தீர்மானத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிறைவாகப் பேசிய முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவரின் திருத்தம் தீர்மானத்தின் 4-ம் பத்தியாக சேர்த்து திருத்தம் உள்ளடங்கிய தீர்மானமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் முன்மொழிந்த திருத்தம் வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், மற்ற கட்சித் தலைவர்கள் அதன் மீது கருத்துக் கூறமுடியவில்லை.

இந்த நிலையில், அதன் விபரம் முழுமையாக வெளியான பிறகு “கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்டக் கூடாது. அதற்கு மத்திய அரசும், மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகமும், நீர்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை என எந்தவொரு துறையும் யாதொரு அனுமதியும் வழங்கக் கூடாது என்ற முறையில் மட்டுமே தீர்மானம் இருக்க வேண்டும்.

எதிர்கட்சித் தலைவர் தெரிவித்த திருத்தம் முற்றிலுமாக நீக்கப்பட்டு, முதல்-அமைச்சர் முன் மொழிந்த நிலையிலான தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு பொருத்தமான திருத்தங்களை அரசு தானே முன்வந்து நிறைவேற்ற வேண்டும். மேகதாது அணை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விரைந்து நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.