தமிழக செய்திகள்

வன்முறை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மு. வீரபாண்டியன் கோரிக்கை

அரசின் உரிய அனுமதியின்றி இயங்கி வரும் மதுக்கூடங்களை உடனடியாக மூடிடவேண்டும் என்று மு. வீரபாண்டியன் கூறினார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மதுக்கூடத்தில்  ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து , யான்சி (18) என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் கார் ஏற்றி கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வு சட்டத்தின் ஆட்சிக்கு விடப்பட்ட சவாலாகும்.

தமிழ்நாட்டில் பாலியல் வன்முறைகள் உள்பட தொடரும் குற்றச் செயல்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மாணவி மீது கார் ஏற்றி கொலை செய்த நபர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு  நீதி மன்றம் மூலம் அதிகப்பட்சத் தண்டனைகளை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

பெண்களுக்கான பாதுகாப்பு

தனியார் மதுக்கூடங்களில் களியாட்டம் நடத்தும் கலாச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். அரசின் உரிய அனுமதியின்றி இயங்கி வரும் மதுக்கூடங்களை உடனடியாக மூடிடவேண்டும். பணியிடங்கள் உட்பட எல்லாப் பகுதிகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

காவல் துறை மற்றும் உளவுத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்திட வேண்டும். மது, போதைப் பழக்கம், பாலியல் வன்முறைகள் உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு சமூகப் பொருளாதார பிரச்சினைகளே காரணமாக அமைகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதையொட்டி எழக்கூடிய பொருளாதார நெருக்கடிகளும் இளைய தலைமுறையின் எதிர்கால வாழ்வை சீரழித்து வருகின்றன.

பண்பாட்டு மாற்றங்கள்

இன்றைய  நெருக்கடியான வாழ்க்கை முறை உருவாக்கியுள்ள விரக்தியும் ,கடும் மன அழுத்தமும், பல்வேறு உளவியல் பிரச்சினைகளும், போதிய பொழுதுபோக்கு வசதிகள், விளையாட்டு வசதிகள் இல்லாததும் இத்தகைய வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாகின்றன. இத்தகைய பிரச்சினைகளுக்கு ,தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு அரசு முயல வேண்டும்.

அதே போன்று, சமூகத்தில் முற்போக்குப் பண்பாட்டு மாற்றங்களை உருவாக்கிட கல்வி, கலை, இலக்கியம், திரைப்படங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

வன்முறை கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர இதுபோன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.