சென்னை,
சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்,மாதவரம் ஏரி படகு குழாம் பகுதியில் ரூ.7.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி, மாதவரம் ஏரியில் படகு குழாம் அமைக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதவரம் ஏரி படகு குழாம் பகுதியில், மாதவரம் ஏரி மறுசீரமைத்தல் பகுதி-2ல் திட்டத்தின் கீழ் ரூ.7.22 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி கரைகள் அமைத்து மேம்படுத்தும் பணியினை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏரிப் பகுதி மற்றும் பூங்கா பகுதிகளை தூய்மையாகப் பராமரித்திட அறிவுறுத்தினார்.
மாதவரம் ஏரி 66.11 ஏக்கர் பரப்பளவில் 3350 மீ. சுற்றளவு உடையது. இதில் பகுதி-2 மறுசீரமைப்புப் பணியில் 1600 மீ. சுற்றளவில், ஏரியில் உள்ள செடி, கொடிகள் அகற்றுதல், தூர்வாருதல், நடைபாதை அமைத்தல், இருக்கைகள் மற்றும் மின்வசதி, புல் தரை அமைத்தல், மரம் நடுதல், 5 எண்ணிக்கையிலான மழைநீர் வடிகால் இணைப்புகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பெரிய சேக்காடு, பேங்க் காலனி, கே.கே.தாழை, மாதவரம் மில்க் காலனி ஆகிய 165 தெருக்களைச் சார்ந்த 25 ஆயிரம் மக்கள் பயனடைவர்.
முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் மாதவரம் மண்டலம், வார்டு-30, மாதவரம் மில்க் காலனி பூங்கா பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிப்பிடத்தினையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாகப் பராமரித்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மில்க் காலனி பிரதான சாலையில் உள்ள மாதவரம் ஆவின் குளத்தின் பராமரிப்புப் பணிகள், மழைநீர் வடிகால் மூலம் குளத்திற்கு நீர் வரத்து மற்றும் நீர் வெளியேறி செல்லுதல், நடைபாதை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாதவரம் சி.எம்.டி.ஏ. சரக்கு வாகனம் நிறுத்தும் முனையத்தின் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது, இணை ஆணையாளர் (சுகாதாரம்) வீ.ப. ஜெயசீலன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.