தமிழக செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்களுக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு!

ஆளும் தவெக அரசுக்கு தகுந்த பாடம் புகட்ட இத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

சென்னை,

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர்களுக்கு எஸ்டிபிஐ கட்சி தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல்

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்களாக இருந்தவர்கள், தங்களது சுயநல அரசியல் ஆதாயத்திற்காகப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட இவ்விரு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்டிபிஐ கட்சி ஆதரவு

நடைபெறவுள்ள இத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் வழக்கறிஞர் இ. பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு ஆதரவு கோரியதையடுத்து, எஸ்டிபிஐ கட்சி திமுக வேட்பாளர்களுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்வது எனத் தீர்மானித்துள்ளது. இவ்விரு வேட்பாளர்களும் கற்றறிந்தவர்கள்; மக்கள் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்டவர்கள். ஆகவே, இவர்களை மக்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவர்களின் மகத்தான வெற்றிக்கு எஸ்டிபிஐ கட்சி தீவிரத் தேர்தல் களப்பணியாற்றும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், தொகுதி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்துவிட்டு, மக்களால் வழங்கப்பட்ட புனிதமான ஆணையைச் சிறுமைப்படுத்தி, இடைத்தேர்தலுக்கு காரணமாகி மீண்டும் தேர்தலில் போட்டியிடுபவர்களை அடையாளங்கண்டு, இத்தேர்தலில் மக்கள் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். மக்களாட்சி தத்துவத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கும், ஆளும் தவெக அரசுக்கும் தகுந்த பாடம் புகட்ட இத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT