சென்னை,
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக சபாநாயகர் அறையில் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சி சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே முத்திரை பதித்தது. இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் மதுராந்தகம் எம்.எல்.ஏவாக மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ.வாக சத்தியபாமா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். எம்.எல்.ஏக்கள் பதவியேற்றபின்போது அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ், அருண்ராஜ் உடனிருந்தனர். இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளும், சத்தியபாமா 66,841 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ராஜினாமா செய்திருந்தனர். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த இருவரும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்கள் இடங்கள் உள்ளன. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 தொகுதிகள் காலியாக இருந்தன. எனவே சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 227 ஆக இருந்தது. இதில் ஆளும் கட்சி த.வெ.க.வுக்கு சபாநாயகர் உள்பட 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
தி.மு.க.வுக்கு 59. அ.தி.மு.க.வுக்கு 41, காங்கிர சுக்கு 5, பா.ம.க.வுக்கு 4. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு. ஐ.யூ.எம்.எல்., விடு தலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2, பா.ஜனதா, தே.மு.தி.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தலா 1 எம்.எல்.ஏ. என்ற அளவில் சட்டசபையில் கட்சிகளின் பலம் உள்ளது. தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சட்டசபையில் அக்கட்சியின் பலம் 109 ஆக அதிகரித்துள்ளது.