தமிழக செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்

இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன.

சென்னை,

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் த.வெ.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன. இதனால் 5 முனைப் போட்டி நிலவுகிறது.

மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

விஜய் பிரசாரம்

2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு (அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இந்த மாதம் இறுதி மற்றும் அடுத்த மாதம் தொடக்கத்தில் ஒரு தொகுதிக்கு தலா 2 நாட்கள் என 4 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். முதல்-அமைச்சர் விஜய் பேசுவதற்காக மதுராந்தகம், தாராபுரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதல்-அமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது அவரை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் தான் தற்போது முதல்-அமைச்சராக விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளார். இதையொட்டி 2 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. த.வெ.க. ஆளும் கட்சியான பிறகு முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களும் 2 தொகுதிகளிலும் பிரசாரத்திற்கு தயாராகி வருகிறார்கள். மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதேபோன்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.

களை கட்டும் தேர்தல் களம்

இப்படி இடைத்தேர்தல்களில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருவதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தேர்தல் களம் களை கட்டுகிறது. தங்களது கட்சித் தலைவர்களை வரவேற்பதற்காக அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT