சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், “தமிழக சட்டசபை தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கக்கூடாது. மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி டி.வி. தமிழ்செல்வி முன்பு நேற்று மாலை அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.அப்போது டாக்டர் ராமதாஸ் தரப்பில், “அன்புமணி, கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். எனவே, இருதரப்புக்கும் மாம்பழம் சின்னம் வேண்டாம்.
அந்தச் சின்னத்தை முடக்கி விடவேண்டும். பொதுவான சின்னத்தைக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஆனால், அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கத் தேர்தல் கமிஷன் முயற்சிக்கிறது. அதனால் சின்னத்தை முடக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.நீதிமன்றத்தின் கேள்விகள்அதற்கு நீதிபதி, “பா.ம.க.வின் தேர்தல் சின்னம் மாம்பழம் என்று வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்போது அந்தச் சின்னத்தை முடக்குவதால், பா.ம.க.விற்குத்தான் பாதிப்பு.
தேர்தலுக்குச் சில நாட்கள் தான் உள்ளது. தேர்தல் கமிஷன் தரும் புதிய சின்னத்தை எப்படி வாக்காளர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவீர்கள்? சின்னத்தை முடக்குவதால் யாருக்கு என்ன லாபம்?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.’’
அதற்கு டாக்டர் ராமதாஸ் தரப்பில், "அன்புமணி தரப்பினர் 18 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகின்றனர். பிற தொகுதிகளில் போட்டியிடும் எங்கள் தரப்பு வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு அன்புமணி தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது” என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அன்புமணி தரப்பின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்கும்படி அவரது வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.தேர்தல் கமிஷன் மற்றும் அன்புமணி தரப்பு விளக்கம்தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘பா.ம.க., அங்கீகரிக்கப்பட்ட கட்சி கிடையாது.
ஏற்கனவே பெற்ற அங்கீகாரத்தை இழந்துவிட்டது. எனவே, தற்போது பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. மாம்பழம் சின்னம் பொதுச் சின்னமாகும். அந்தச் சின்னத்தை முடக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் இதுபோன்ற வழக்கு தொடர முடியாது.
தற்போதுள்ள நிலையில், இந்த ஐகோர்ட்டும் சின்னம் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது'' என்று வாதிட்டார்.பா.ம.க. தலைவர் அன்புமணி தரப்பில், “தமிழ்நாட்டில் எல்லா தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பரிசீலனை முடிந்துவிட்டது. வேட்புமனுவை வாபஸ் பெறும் காலமும் முடிந்துவிட்டது. இனி ராமதாஸ் வேண்டுமென்றால் தேர்தல் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம்'' என்று வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக நீதிபதி கூறியிருந்தார். இந்த நிலையில், மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய ராமதாஸ் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே வேட்பாளர் பட்டியல், இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், மனு ஏற்கத்தக்கது அல்ல என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.