சென்னை,
கடலில் மூழ்குபவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஹெலிகாப்டர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மாதவரத்தை சேர்ந்த கோபால் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், எனது மகன் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் அவனை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மாயமான சிறுவனை தேடும் பணிகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய சென்னை போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் பி.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை போலீசார் தரப்பில், இதற்கென ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை இருப்பதாகவும், மாநில காவல்துறை தவிர, தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு ஆணையத்தின் ஒரு பிரிவான கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையமும் கடலில் மீட்பு பணிகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 'மீட்பு பணிகளுக்காக 2022-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு திட்டத்தின் கீழ், மத்திய மற்றும் மாநில விசாரணை முகமைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து எந்த தகவலும் அறிக்கையில் இல்லை. ஒருங்கிணைந்து செயல்படும் முயற்சியை மேற்கொண்டிருந்தால், பல உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். கடலில் மூழ்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஹெலிகாப்டர்களை ஏன் பயன்படுத்தக்கூடாது?
பேரிடரின்போது நடுக்கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை காப்பாற்ற மத்திய, மாநில அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை. கடலில் மூழ்குபவர்களை மீட்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை குறித்த விவரங்களை கடல்சார் ஒருங்கிணைப்பு அமைப்பு மற்றும் சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு ஆணையத்தின் பொறுப்பு பிரதிநிதி ஆகியோர் தாக்கல் செய்யவேண்டும்' என உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.