தமிழ்நாடு சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா 10 ஆயிரத்து 245 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இவர் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி வாக்காளர் காந்திமதிநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார். இதற்கிடையில், இசக்கிய சுப்பையா தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்தார்.
அதேநேரம், இந்த தேர்தல் வழக்கிற்கு பதில் அளிக்கும்படி இசக்கிய சுப்பையாவுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த இசக்கி சுப்பையா, தனக்கு எதிராக தொடரப்பட்ட இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனால், அந்த வழக்கை நிராகரிக்க வேண்டும்”என்று கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘‘வாக்காளர் காந்திமதிநாதன் தாக்கல் செய்துள்ள இந்த தேர்தல் மனுவை நிராகரிக்க முடியாது. இசக்கி சுப்பையாவின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரையை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்ற மனுதாரர் காந்திமதிநாதனின் கோரிக்கையை தேர்தல் வழக்கில் இருந்து நீக்குகிறேன்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, இரண்டாவது இடத்தைப் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றால், தொகுதியில் இரு வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், அம்பாசமுத்திரம் தொகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால், இரண்டாவது இடத்தைப் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது’’ என்று கூறியுள்ளார்.