தமிழக செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இன்று தொடங்கின.

மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இதனால், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியது.

இந்நிலையில், மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளுக்கு பின் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கின. எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ள எல் அண்ட் டி நிறுவனம் இன்று வாஸ்து பூஜையுடன் கட்டுமான பணிகளை துவக்கி உள்ளது. 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கட்டப்படுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 33 மாதங்களில் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT