தமிழக செய்திகள்

மதுரை: 102 நாட்களுக்கு பிறகு ஆகாஷ் உடல் தகனம்

ஆகாஷ் உடலை மத வழக்கத்தை பின்பற்றி முறையாக அடக்கம் செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (வயது 24) என்ற வாலிபரை அரிவாள் வெட்டு சம்பவத்தில் போலீசார் கைது செய்தனர். அப்போது அவரை போலீசார் தாக்கியதில் வலது கால் எலும்பு முறிந்தது. பின்னர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை கைது செய்யக்கோரி ஆகாசின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவருடைய தந்தை ராஜேஷ் கண்ணன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆகாஷ் இறப்பு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாக விசாரிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என தெரிவித்து ஆகாஷ் உடலை அவருடைய குடும்பத்தினர் பெற மறுத்துவிட்டனர். இதனால் 100 நாட்களாக அவரது உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

உடலை பெற மறுப்பு

சமீபத்தில் நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு அரசு வக்கீல் ஆஜராகி, ஆகாஷ் உடல் 3 மாதத்துக்கும் மேலாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. உடலை உறவினர்கள் பெற மறுத்து வருவது ஏற்புடையதல்ல. உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரி இருந்தார்.

நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உடனடியாக ஆகாஷின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. ஆனாலும் உடலை பெறவில்லை. இந்தநிலையில் இந்த வழக்கை நேற்று நீதிபதி விக்டோரியா கவுரி விசாரித்தார்.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, நீண்டநாளாக ஆகாஷ் உடல் பிணவறையில் இருப்பதால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. அங்கு பணியில் இருக்கும் டாக்டர்களுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் விவகாரமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு ஆகாஷின் உடலை இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

அதற்கு மனுதாரர் வக்கீல் ஆஜராகி, இந்த விவகாரத்தில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவுகள் 3 (2) (v) மற்றும் பிரிவு 3 (2) (vii) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஆகாஷ் உடலை பெற இயலாது என தெரிவித்தனர்.

சிதைந்துவிட்ட உடல்

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் தரப்பினரின் கூற்றுப்படி இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை, உயிரிழந்தவரின் உடலை பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் தயாராக இல்லை என்பது தெரிகிறது. இந்த வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்ற அடிப்படையில் உடலை பெற்றுக்கொள்ள மறுப்பதை நியாயப்படுத்த முடியாது.

இறந்தவரின் உடல் பெருமளவு சிதைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

உடலை தொடர்ந்து பாதுகாத்து வைப்பதால் எந்தவித விசாரணை பயனும் இல்லை. உறவினர்களின் நடவடிக்கை, இறந்தவருக்கு அளிக்க வேண்டிய கடமைகளுக்கு முரணாக உள்ளது. ஒரு தனிநபரின் வாழ்நாளில் அவரை பாதுகாக்கும் அரசியலமைப்புச்சட்டம், இறந்த பின்னவரும் அவரை அடக்கம் செய்வது வரை தொடருகிறது. உரிமை கோரப்படாத உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டியது அரசின் கடமை என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

உறவினர்கள் இல்லாத காரணத்தினாலோ அல்லது இறுதி சடங்குகளை செய்ய உறவினர்கள் மறுத்தாலோ இதேபோன்ற நடைமுறைகளை ஐகோர்ட்டுகள் ஏற்கனவே அங்கீகரித்து இருக்கின்றன.

அடக்கம் செய்ய உத்தரவு

ஆகாஷின் உடலை பெற்றுக்கொள்வதற்கு அவருடைய உறவினர்களுக்கு போதுமான வாய்ப்பும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அவர்கள் உடலை பெற்றுக்கொள்ளும்படி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை. இதனால் ஆகாஷின் உடல் உரிமை கோரப்படாத உடலாகவே கருதப்படுகிறது. அவரது இறப்பு வழக்கில் முறையான விசாரணை நடக்கிறது. எனவே அவரது உடலை தொடர்ந்து பாதுகாத்து வைப்பதில் எந்த பயனும் இல்லை.

எனவே மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மற்றும் பிற தகுதியுள்ள அதிகாரிகள் அனைவரும், ஆகாஷ் டெலிசனின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இறந்தவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடைபிடித்த மத நம்பிக்கை, வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு முழுமையாக இணங்கி இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விசாரணை பாதிக்கக்கூடாது

முன்னதாக மாவட்ட நிர்வாகம், அவரது உடலை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து பாதுகாத்து வைக்க வேண்டும். இந்த நடவடிக்கை போலீசாரின் விசாரணையை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது. சி.பி.சி.ஐ.டி. தனது விசாரணையை தொடர வேண்டும். அவர்கள் விசாரணையை விரைவாக முடித்து இறுதி அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆகாஷ் உடல் தகனம்

இந்நிலையில் சிவகங்கையில் போலீஸ் காவலில் மரணமடைந்த ஆகாஷ் உடல் மதுரை தத்தனேரி மயானத்தில் பலத்த பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. மதுரை அமர்வு அனுமதி அளித்ததை அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆகாஷின் உடல் 102 நாட்களுக்கு பிறகு

கோட்டாட்சியர் கருணாகரன் முன்னிலையில் இன்று (17.06.2026) தகனம் செய்யப்பட்டது.

ஆகாஷ் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

முன்னதாக காவலில் மரணமடைந்த ஆகாஷ் குடும்பத்தினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆகாஷின் உடலை அரசே அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டநிலையில், மருத்துவமனை முன் குவிந்த ஆகாஷ் குடும்பத்தினரை வலுக்கட்டாயமாக கைது செய்வதாக புகார் தெரிவித்தனர்.