தமிழக செய்திகள்

சீர்வரிசை குறித்த பிரச்சினையால் நிகழ்ந்த கொடூரம்: வாலிபரை அடித்துக்கொன்ற தாய்மாமா

இந்த சம்பவம் தொடர்பாக சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்மாமாவை கைது செய்தனர்.

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்துபட்டியை அடுத்த ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 33). லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் வைத்து ஓட்டி வந்தார். இவருடைய மனைவி பாரதி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சத்தியமூர்த்தியின் தாய்மாமா தங்கமாயன்(60). கடந்த ஏப்ரல் மாதம் சத்தியமூர்த்தி தனது குழந்தைகளுக்கு காதணி விழா வைத்துள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக தங்கமாயன் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இந்தநிலையில் தங்கமாயனின் மகள் லட்சுமி இல்ல விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு சீர்வரிசை குறித்த பிரச்சினை ஏற்பட்டு, சத்தியமூர்த்தியுடன் விரோதம் அதிகமானது. நேற்று முன்தினம் இரவு சத்தியமூர்த்தி வேலை முடித்து ஊருக்கு வந்தார்.

அந்த நேரத்தில் எதிரே வந்த தங்கமாயன், அவரை வழிமறித்து தகராறு செய்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் நள்ளிரவில் சத்தியமூர்த்தியும், அவரது மனைவி பாரதியும், தங்கமாயன் வீட்டிற்கு சென்று இதுகுறித்து கேட்டனர். அப்போது தங்கமாயனுக்கும், சத்தியமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த தங்கமாயன், கீழே கிடந்த கட்டையை எடுத்து சத்தியமூர்த்தியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சத்தியமூர்த்தி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை சத்தியமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாரதி கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமாயனை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.