மதுரை,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க கூட பணிகளில் லட்சக்கணக்கில் நிதியை கையாடல் செய்து பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்காக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவசேரி அரசு பள்ளி வளாகத்தில் காலை உணவு திட்டத்திற்காக சமையல் கூடம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் மின்சார வசதிகள் செய்வதற்காக போடப்பட்ட பில்கள் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
அங்கு புதிதாக வெறும் 4 மின் விளக்குகள் மற்றும் 1 எக்சாஸ்ட் பேன் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தரப்பில் ரூ.33,000 பில் போட்டு மோசடி செய்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேவசேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மொத்தம் 19 மையங்களில் இந்த உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 19 மையங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொமாக வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே உண்மையாக செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கணக்கு காட்டும் போது ரூ.10.63 லட்சம் வரை போலி பில்கள் தயாரித்து அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவர்களின் உணவு திட்ட பணியில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த தகவலையடுத்து, சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மின் விளக்குகள், பேன் மற்றும் கட்டுமான பணிகளின் தரத்தை பார்த்து அதிர்ந்து போன அவர், அதற்குரிய பில்களையும் அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு செய்தார்.
இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.