மதுரை,
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த யூடியூபர் சரத்குமார் என்பவர், திருநங்கைகள் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் அவதூறான வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் சரத்குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், யூடியூபர் சரத்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையின்போது திருநங்கைகளின் நிலை குறித்து மிகுந்த கவலை தெரிவித்த நீதிபதி, திருநங்கைகளை புறக்கணித்து வறுமைக்கு தள்ளுவது சமூகத்தின் தோல்வி என குறிப்பிட்டார்.
மேலும், திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை ஜூலை 26-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.