கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் போதிய உபகரணங்கள் இல்லாதது தனியாரை ஊக்குவிப்பதற்கு சமம் - மதுரை ஐகோர்ட்டு கருத்து

உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் அலட்சியம் செய்வது, மறைமுகமாக தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதாகும் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

மதுரை,

அரசு மருத்துவமனைகளில் போதிய உபகரணங்கள் இல்லாதது தனியாரை ஊக்குவிப்பதற்கு சமம் என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

கேத் ஆய்வகம்

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கதிர் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதயவியல் துறையில் கேத் ஆய்வகம் செயல்படுகிறது. இந்த ஆய்வகத்திற்கான கருவிகள் மற்றும் கதிர் வீச்சு பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு தேவையான அவசர கால நிதிக்கான அனுமதியை வழங்க கோரிக்கை விடுத்தும் பல மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளது.

சிகிச்சை வழங்குவதில் தாமதம்

இதனால் நோயாளிகள் கேத் ஆய்வகத்தில் உரிய பரிசோதனைகளை நடத்த இயலாத நிலை நிலவுகிறது. உரிய பரிசோதனை முடிவுகள் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மதுரை அரசு மருத்துவமனை இதயவியல் துறை சமர்ப்பித்து உள்ள பட்டியல் அடிப்படையில் தேவையான உபகரணங்களை விரைவாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

மறைமுக ஊக்குவிப்பு

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் அலட்சியம் செய்வது, மறைமுகமாக தனியார் மருத்துவமனைகள், பள்ளிகளை ஊக்குவிப்பதாகும். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை, தாங்கள் நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு அரசு மருத்துவர்கள் அனுப்பி வைப்பதும் நடக்கிறது.

நம்பிக்கையை சிதைத்துவிடும்

இதுபோன்ற செயல்கள் அரசு மருத்துவமனை மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும் என்று கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆய்வகத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக உரிய அனுமதி உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT