மதுரை,
தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூரில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள பெரியார் சிலையை 4 வாரத்தில் பாதுகாப்பாக அகற்றி அரசுக்குச் சொந்தமான வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த ராமரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவிலானது ஆயிரம் ஆண்டு பழமையானது. இந்த கோவிலின் முன்பாக சட்டவிரோதமாக ஈ.வெ.ரா. பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே கோவில் நிலத்தில் உள்ள சிலையை அகற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கை பொறுத்தவரை பெரியார் சிலை அமைக்க கோவில் நிர்வாகத்திடமும், மாவட்ட கலெக்டரிடமும் அனுமதி பெறவில்லை. கோவில் நிர்வாகம் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மூலம் பெரியார் சிலை கோவிலுக்கு சொந்தமான இடத்தில்தான் நிறுவப்பட்டுள்ளது என தெரியவருகிறது.
எனவே தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து கண்டியூரில் பிரம்மசிரகண்டீசுவரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள பெரியார் சிலையை 4 வாரத்தில் பாதுகாப்பாக அகற்றி அரசுக்குச் சொந்தமான வேறு இடத்தில் நிறுவ வேண்டும். இந்த நடவடிக்கை குறித்து கலெக்டர் இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.