தமிழக செய்திகள்

தீபம் ஏற்றலாம்... தீபத்தூண் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்துக - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மதுரை,

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

கார்த்திகை தீபம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20-ந்தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

144 தடை உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று விடுமுறை என்பதால் இன்றைக்கும் சீராய்வு மனு விசாரணைக்கு வரவாய்ப்பில்லை. இதனால் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படலாம். இருப்பினும் சீராய்வு மனு நிலுவையில் இருப்பதை கூறி அதில் முடிவு வரும் வரை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தள்ளிப்போடவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக திருப்பரங்குன்றம் பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. திருப்பரங்குன்றம் முழு பகுதியும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

இதற்கிடையில் மதுரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், "மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறுவதற்காக அல்ல. மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல; கல் தூண் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தீபம் ஏற்றுவதோடு நின்றுவிடல்லை, மாறாக மலை, அதற்கு அப்பால் செல்லவும் பொருந்தும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்த ஐகோர்ட்டு கட்டாயம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கு முடித்து வைப்பு

இதையடுத்து, "நாங்கள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில்தான் தீபம் ஏற்றச் சொல்கிறோம். தற்போதைய நிலவரப்படி தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தீபம் ஏற்றுவது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று கூறி திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க கோரிய வழக்கை ஐகோர்ட்டு மதுரைக் கிளை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

SCROLL FOR NEXT