மதுரை,
கோவை காந்திபுரத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களை கொண்ட பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் இந்த நூலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் நூலகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் புத்தகங்கள் வாங்க ரூ.50 கோடியும், இ-புத்தகங்கள் வாங்க ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பெரியார் நூலகத்தில் இடம் பெற்றிருந்த புத்தகங்கள் போலி பதிப்பகங்கள் மூலம் வாங்கப்பட்டு உள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு பயன் படுத்தி புத்தகங்களின் முகப்புரைகள் எழுதப்பட்டு உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.மேலும் புத்தகங்களின் எழுத்தாளர்கள் பெயர்களும் சர்ச்சைக்குரிய வகையில் இருந்தன.
இதுகுறித்த குற்றச்சாட்டுகளை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியதுடன், அரசு இந்த புத்தகங்கள் குறித்தும், பதிப்பகங்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து பெரியார் நூலக புத்தக கொள்முதல் விவகாரம் பெரும் புயலை கிளப்பியது.
அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் பெரியார் நூலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் நடந்த ஊழலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இதுதொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். எனினும், தி.மு.க. இந்த குற்றசாட்டை மறுத்து வருகிறது.
இதனிடையே நூல் கொள்முதல் தொடர்பான கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தாத பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களை வாங்க பரிந்துரைத்தது யார்? அகல்விளக்கு பதிப்பக வங்கி கணக்கில் இருந்து யார் யாருக்கெல்லாம் பணம் சென்றுள்ளது?
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துவிட்டதா? இல்லையா? குற்றவாளி யார் என தெரியாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டுமே?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நாளை(11-ந்தேதி) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.