தமிழக செய்திகள்

கோவில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

குத்தகை காலம், எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது போன்ற அனைத்து விவரங்களையும் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை,

கரூரில் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் கோவில் நிலங்களின் வாடகை விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் எத்தனை குடியிருப்புகள், கடைகள், நிலங்கள் உள்ளன என்பதையும், வாடகைக்கு இருப்பவர்களின் விவரங்கள் மற்றும் குத்தகை காலம், எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது போன்ற அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முன்னேற்றம் இல்லை என்றும், கரூர் கலெக்டர், மாவட்ட எஸ்.பி., கோவில் இணை ஆணையரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து ஆணையிட்ட பிறகும் நடவடிக்கை இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.