கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கோவில் அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தல்

அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

மதுரை,

கோவில் அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அறங்காவலர்கள் நியமனம்

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கோவில்களுக்கு மரபுவழி சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கான நபர்களில் ஒருவர் பட்டியல் சமுதாயம் அல்லது பட்டியல் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றோ அல்லது மற்றொருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்றோ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இந்த பதவிக்கு விண்ணப்பித்தவர்களை பரிசீலித்து தேர்வுசெய்ய 7 பேர் கொண்ட குழுவை கடந்த ஜூலை மாதம் அரசு அமைத்தது.

இணையதளத்தில் பதிவேற்றம்

கோவில்களில் எவ்விதமான பின்புலமும் இல்லாத நபர்களை அறங்காவலர்களாக நியமனம் செய்வது மிகவும் அவசியமானது. எனவே கோவில்களில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் மற்றும் அதனோடு இணைக்கப்பட்ட ஆவணங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதேபோல அறங்காவலராக ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்கவும், அறங்காவலர் நியமன உத்தரவுகளை அறநிலையத்துறையின் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட கோவில் இணையதளத்திலும் வெளியிடவும் உத்தரவிட வேண்டும். மேலும் அறங்காவலர் நியமன உத்தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளில் இருந்து அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு உரிய காலக்கெடுவை விதிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

வெளிப்படைத்தன்மை

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எனவே அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

SCROLL FOR NEXT