மதுரை சர்வதேச விமான நிலையம் 
தமிழக செய்திகள்

மதுரை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான சேவை தொடக்கம்

பயணிகளுக்கு நம்பகமான, திறன் வாய்ந்த மற்றும் கனிவான சேவைகளை வழங்குவதை முதன்மை நோக்கமாக கொண்டு இந்த இயக்கம் செயல்படுகிறது.

மதுரை,

மதுரை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவையின் தரம் மற்றும் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில், 21 நாட்கள் நீடிக்கும் "சிறப்பு பயண சேவை இயக்கம்" கடந்த 17-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

வந்தே மாதரம்

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையால் இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், விமான நிலைய இயக்குநர் குத்துவிளக்கு ஏற்றி இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, முனைய கட்டடத்தில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடல் உணர்வுபூர்வமாகப் பாடப்பட்டது. முதலாம் நாள் நிகழ்ச்சிகளில் பயணிகள் அனைவரும் திரளாகவும், ஆர்வத்துடனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மத்திய மந்திரி ஆய்வு

பயணிகளுக்கு நம்பகமான, திறன் வாய்ந்த மற்றும் கனிவான சேவைகளை வழங்குவதை முதன்மை நோக்கமாக கொண்டு இந்த இயக்கம் செயல்படுகிறது. இதற்காக, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி நாட்டின் பல்வேறு விமான நிலையங்களுக்கு நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

2-ஆம் நாள் தூய்மை பணி ஆய்வு

இயக்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் முற்றிலும் தூய்மையை மையமாக கொண்டு அமைந்தன. ‘தூய்மையான, சிறந்த வெளிப்பகுதி’ என்ற கருப்பொருளின் கீழ், விமான நிலைய இயக்குநர், முனைய மேலாளர்கள் மற்றும் தூய்மை பராமரிப்பு குழுவினர் இணைந்து விமான நிலைய வளாகம் முழுவதும் கூட்டு ஆய்வு நடத்தினர். அப்போது, பயணிகள் அதிகம் நடமாடும் முக்கிய பகுதிகள் அனைத்தும் சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், ஒரு சிறப்பு பணியாக விமான நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குப்பை தொட்டிகளும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்டன. பயணிகளுக்கு இனிமையான மற்றும் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்க மதுரை சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT