மதுரை,
மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு நவ.29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில், தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 3 தளங்கள் கொண்ட இந்த ஷோரூமின் முதல் தளத்தில் தங்கநகை விற்பனை பிரிவு செயல்பட்டு வந்தது. மற்ற தளங்களில் வைரம், வெள்ளி நகைகளுக்கான விற்பனையகம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.
இந்தநிலையில், கடந்த 12-ந்தேதி அதிகாலையில், கடைக்குள் புகுந்த ஒரு வாலிபர், சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.21 கோடி இருக்கும் என போலீசார் கூறினர்.
உடல் முழுவதும் கருப்பு துணியை சுற்றிக் கொண்டும் முகமூடி, கையுறைகள் அணிந்தவாறு வந்து நகைகளை அந்த வாலிபர் கொள்ளையடித்துள்ளார். கடையின் பின்புறம் இருந்த இரும்பு சாரம் வழியாக மேலே ஏறி, அங்கிருந்து லிப்ட் அமைக்கும் பணிக்காக போட்டிருந்த கயிற்றை பிடித்து லிப்ட் பாதை வழியாக இறங்கி, நகைகளை கொள்ளையடித்து விட்டு ஒரு இரும்பு ஜன்னலின் கதவுகளை உடைத்து விட்டு தப்பிய காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.
கடையில் இருந்து வெளியே வந்தபின்பு, மாடக்குளம் சாலை வழியாக ஸ்கூட்டரில் தப்பி சென்றுள்ளார். இதே நபர் ஏற்கனவே 5-ந்தேதி நள்ளிரவில் அதே கடையில் புகுந்து கொள்ளை ஒத்திகையை நடத்தி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கடை திறக்கப்பட்ட நாளில் இருந்து 3 முறை வெவ்வேறு உடைகள், தொப்பி, முககவசம் அணிந்து வந்து நோட்டமிட்டுள்ளார். எந்த நகையும், பொருளும் வாங்காமல் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அந்த வாலிபர் மீது சந்தேகம் எழுந்தது. அவர் மதுரை பழங்காநத்தம் அருட்பெரும்ஜோதி தெருவை சேர்ந்தவர் என்றும், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை வெளியிட்டு பிரபலமான நிஷாந்த் (வயது 25) என்பதும் உறுதியானது. இவருடைய தந்தை சுரேஷ் (50). ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக புகுந்து தீவிர சோதனை செய்தனர். சல்லடைபோட்டு தேடினர்.
வீட்டில் எங்காவது நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அவரது பெற்றோரிடமும் விசாரித்தனர். இந்த விசாரணையும், சோதனையும் நள்ளிரவையும் தாண்டி 7 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.
தனது வீட்டுக்கு போலீஸ் வந்ததை அறிந்த நிஷாந்த் தனது போனை சுவிட்ச்ஆப் செய்துள்ளார். கொள்ளை நடந்த பின்பு வெளியூருக்கு சென்ற அவர், அதன்பின் வீட்டுக்கு வராதது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை அதிகமாக்கியது. அவரது செல்போன் சிக்னல்களை வைத்து தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே, பொள்ளாச்சி, திருப்பூர், சென்னை போன்ற இடங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். அவர்தான் நகைகளை கொள்ளையடித்து உள்ளார் என்பதை போலீசார் உறுதி செய்துகொண்டு நேற்று காலையில் இருந்து அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கினர்.
இதற்கிடையே முக்கிய திருப்பமாக, நிஷாந்த் நகைகளை கொள்ளையடித்து விட்டு, மாடக்குளம் பகுதியில் உள்ள கண்மாய் கரைக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்று வந்துள்ளார். இதுவும் சில சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது.
எனவே நேற்று காலையில் அந்த கண்மாயில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கண்மாய் கரை, அங்குள்ள மலைப்பகுதி, ரெயில்வே தண்டவாளம், வாழைத்தோப்பு உள்பட அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக தேடினர்.
கொள்ளை நடந்த தினத்தில் நிஷாந்த் யார், யாருடன் போனில் பேசினார் என விசாரணை நடத்தினர். அதில், மதுரையை சேர்ந்த மற்றொரு இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சி (23) என்பவரிடம் நிஷாந்த் சில முறை பேசியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர் குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். நிஷாந்தும், மீனாட்சியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் நிறைய ரீல்ஸ் வீடியோக்களும் வெளியிட்டுள்ளனர்.
மாடக்குளம் கண்மாய் பகுதிக்கு நிஷாந்த் சென்று வந்த ஆட்டோ அவரது வீட்டு அருகே நின்றிருந்தது. அந்த ஆட்டோ யாருடையது என விசாரித்த போது, அவருடைய தந்தை சுரேஷ் ஒட்டி வந்தது என தெரியவந்தது. அந்த ஆட்டோ உள்பட 3 ஆட்டோக்கள் இவர்களுக்கு உள்ளன.
மேலும் மகன்தான் நகையை கொள்ளையடித்து உள்ளான் என்ற விவரம் சுரேசுக்கு நன்றாகவே தெரியும் என்பதையும் போலீசார் கண்டுபிடித்த நிலையில் சுரேசை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
நேற்று மாலையில், மீனாட்சியிடம் போலீசார் விசாரணையில் இறங்கினர். கொள்ளை நடந்த தினத்தில் நிஷாந்த் வந்து சென்றதையும், அதாவது 6 கிலோ அளவுக்கு தங்க, வைர நகைகளை வீட்டிலும், கண்மாய் பகுதியில் ஓரிடத்திலும் பதுக்கி வைத்திருப்பதாக நிஷாந்த் கூறிச்சென்றதாகவும் அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார். அந்த இடங்களில் விரைந்து சோதனை நடத்தி 6 கிலோ நகைகளையும் போலீசார் கைப்பற்றினர். அந்த இடங்களுக்கு மீனாட்சியை அழைத்துச்சென்று அவரது முன்னிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சம்பவத்தன்று நிஷாந்த் கூறிய தகவல்களை கண்மாய் கரையில் மீனாட்சி போலீசாரிடம் தெரிவித்து செய்து காட்டினார். அதன்பின்னர் மீண்டும் மீனாட்சியை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவ்வளவு பெரிய கொள்ளை பற்றி நன்கு தெரிந்திருந்தும் போலீசாருக்கு தகவல் அளிக்காமல் இருந்தது. கூட்டாக சேர்ந்து உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மீனாட்சியை போலீசார் கைது செய்தனர். இதேபோல் நிஷாந்தின் தந்தை சுரேசும் கைது செய்யப்பட்டார்.
மேலும், தலைமறைவாக உள்ள நிஷாந்தை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவரை கைது செய்து மீதமுள்ள நகைகளையும் மீட்போம் என போலீசார் தெரிவித்தனர்.
விசாரணைக்கு பின்னர் நிசாந்தின் காதலி மீனாட்சி, தந்தை சுரேஷ் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து நேற்று இரவில் மதுரை மூன்றாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி சங்கீதா முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் மீனாட்சி, சுரேஷ் ஆகியோர் அடைக்கப்பட்டனர்.