தமிழக செய்திகள்

மதுரை: ரூ.1 கோடி மதிப்புள்ள திருஞானசம்பந்தர் சிலை காரில் கடத்தல் - 3 பேர் கைது

3 பேரும் மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை,

மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள திருஞானசம்பந்தர் சிலையை காரில் கடத்தி சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் சோதனை

மதுரை வண்டியூர் சேட்டு சில்வர் கம்பெனி அருகே உள்ள எட்டையா தோப்பில் இருந்து திருஞானசம்பந்தர் உலோக சிலை காரில் கடத்தப்பட்டுள்ளதாக மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுரை-திருமங்கலம் 4 வழிச்சாலை சந்திப்பு அருகே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

3 பேர் கைது

அப்போது தங்களுக்கு கிடைத்த குறிப்பிட்ட பதிவெண் கொண்ட கார் வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த காரில் 3 அடி உயரம், 52 கிலோ எடை கொண்ட திருஞானசம்பந்தர் உலோக சிலை இருந்தது. அந்த சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலையை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் பங்கஜம் காலனியை சேர்ந்த ஜெயவேலன் (48 வயது), கீழ் அண்ணாதோப்பு பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (37 வயது), நியூ எல்லீஸ் நகரை சேர்ந்த அக்பர் (52 வயது) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அவர்கள் 3 பேரும் மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

டி.ஜி.பி. பாராட்டு

கைப்பற்றப்பட்டுள்ள திருஞானசம்பந்தர் சிலை 3 அடி உயரம், 52 கிலோ எடையில் இருப்பதாகவும், 15-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர காலகட்டம் மற்றும் கலைப்பாணியை கொண்டுள்ளதாகவும், சுமார் ரூ.1 கோடி மதிப்பு இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிலை கடத்தல் கும்பலை கைது செய்துள்ள போலீசாருக்கு டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. கல்பனா நாயக், ஐ.ஜி. அனில்குமார் கிரி, போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT