மதுரை
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை தொடர்பாக இன்ஸ்டா பிரபலம் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் தனிஷ்க் ஜூவல்லர்சின் புதிய ஷோரூம் உள்ளது. இந்த நகைக்கடையானது, சில தினங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. 3 தளங்கள் கொண்ட இந்த ஷோரூமில், தரைதளம் வாகன நிறுத்தும் இடமாகும். முதல் தளத்தில் தங்க நகை விற்பனை பிரிவு உள்ளது.
2-வது தளத்தில் வைர நகைகள் விற்பனையகமும், 3-வது தளத்தில் வெள்ளி நகைகள், பொருட்கள் விற்பனையகமும் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதுதவிர அந்த நகைக்கடை சுற்றுப்பகுதிகளிலும், வாகன பார்க்கிங் பகுதியிலும் சில கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிக்காக, நகைக்கடையின் பின்பகுதியில் இரும்பு கம்பிகளுடன் சாரம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடந்த 12-ந்தேதி காலை 9.30 மணி அளவில் நகைக்கடையை திறக்க ஊழியர்கள் வரத்தொடங்கினர். கடையை திறந்து பார்த்தபோது, முதல் தளத்தில் அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விற்பனைக்காக வைத்திருந்த ஏராளமான நகைகள் மாயமாகி இருந்தன. அவற்றை வைக்க பயன்படுத்திய பெட்டிகள் காலியாக ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
நகைகள் பெருமளவில் கொள்ளைபோனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், நகைக்கடைக்குள் சென்று பார்வையிட்டனர். சுமார் 15 கிலோ தங்கநகைகளும், இதுதவிர பல வைர நகைகளும் கொள்ளைபோனது உறுதியானது. இந்த தங்க, வைர நகைகளின் மொத்த மதிப்பு ரூ.21 கோடி வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளை நடந்த கடையில் பதிவான தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இதுபோல் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனை நடந்தது. மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உள்பட அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
கடையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். கொள்ளை நடந்த இடத்தில் இருந்து மதுரை ரெயில் நிலையம் அருகே இருப்பதால், ரெயில் மூலமாக கேரளம் அல்லது வடமாநிலங்களுக்கு கொள்ளையன் தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. எனவே, பல்வேறு ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடந்தது.
நகைக்கடை அருகே வேறு சில கட்டிட பணிகளும் நடைபெற்று வருவதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது.
மேலும், புதிதாக திறக்கப்பட்ட இந்த ஷோரூமில் 25 பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வழக்கில் தேடப்பட்டு வரும் இளைஞர் நிஷாந்தின் தந்தை சுரேஷ், இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி ஆகிய இருவரும் போலீசில் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 கிலோ நகைகளை காவல் துறை மீட்டுள்ளது. மீதமுள்ள நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.