இடைத்தேர்தல் 
தமிழக செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அனல் பறந்த இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - நாளை வாக்குப்பதிவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அனல் பறந்த இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

சென்னை,

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அனல் பறந்த இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாளை இடைத்தேர்தல் நடக்கிறது.

7 தொகுதிகள் காலி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை), பி.சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயகுமார் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஐக்கியமானார்கள்.

சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். எனவே 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

2 தொகுதிகளில் இடைத்தேர்தல்

இதற்கிடையே திருச்சி கிழக்கு. கரூர், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் இந்த 5 தொகுதிகளை தவிர்த்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.

5 முனைப் போட்டி

கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தற்போது த.வெ.க. வேட்பாளராக களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் பரந்தாமன் (தி.மு.க.). கணிதா சம்பத் (அ.தி.மு.க.), சுகந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி) உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய சத்தியபாமா த.வெ.க வேட்பாளராக களம் காண்கிறார். இந்த தொகுதியில் சுகன்யா (தி.மு.க.). பானுமதி (அ.தி.மு.க.), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட்), கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 2 தொகுதியிலும் 5 முனை போட்டி நிலவுகிறது.

விஜய் 'ரோடு ஷோ'

த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய், 'ரோடு ஷோ' மூலமாகவும், பிரசார கூட்டங்கள் வாயிலாகவும் 'விசில்' சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். இதேபோன்று த.வெ.க.வை சேர்ந்த அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். கூட்டணி கட்சி தலைவர்களும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பொதுக்கூட்டங்கள், 'ரோடு ஷோ' மூலம் 'உதயசூரியன்' சின்னத்துக்கு வாக்குகள் திரட்டினார். எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வேன் பிரசாரத்தில் ஈடுபட்டு தொகுதிகளை சுற்றி வலம் வந்தார்.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர வேன் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டங்கள், வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொண்டார். அதே போன்று தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரசாரம் ஓய்ந்தது

இந்த 2 தொகுதிகளிலும் அனல் பறந்த இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. பிரசாரம் முடிந்தவுடன் இந்த 2 தொகுதிகளும் தேர்தல், போலீஸ் அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வரப்பட்டது. வெளியூரை சேர்ந்தவர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் உத்தரவிடப்பட்டது.

எனவே பிரசாரம் முடிந்தவுடன் இந்த 2 தொகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் வெளியூரை சேர்ந்தவர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த 2 தொகுதிகளில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளுக்கு நேற்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா நடக்கிறதா? என்பதை கண்காணிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்குகிறது

இடைத்தேர்தலையொட்டி மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி இந்த 2 தொகுதிகளுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT