சென்னை,
இந்தியாவிலேயே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை சட்டசபையில் கடந்த 2023, மார்ச் 27-ம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முதல்கட்டமாக சுமார் 1,13,75,492 மகளிர் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1,000 உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து 2-ம் கட்டமாக கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டு, 1.31 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
தேர்தலைக் காரணம்காட்டி முன்கூட்டியே 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 3,000 மற்றும் கோடைக் கால சிறப்புத் தொகையாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000-ஐ மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு வரவு வைத்தது.
இதனையடுத்து தவெக தலைவர் விஜய் வாக்குறுதியாக அளித்துள்ள ரூ. 2,500 ரொக்கத் தொகை குறித்து, இதுவரை முதல்-அமைச்சர் விஜய் பேசாத நிலையில், இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையானது ரூ. 1,000 வழங்கப்படுமா? அல்லது ரூ. 2,500 வழங்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில், மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.