தமிழக செய்திகள்

மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களுக்கான 5 சதவீதம் இடஒதுக்கீடு ரத்து: செல்வப்பெருந்தகை கண்டனம்

அரசியல் காரணங்களைத் தாண்டி சமூக நீதியை முன்னிறுத்தும் வகையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 5சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு எடுத்துள்ள இந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமூகநீதி மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்தும் நோக்கில் 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை, சட்ட நடைமுறைகள் காரணம் காட்டி முற்றிலும் ரத்து செய்வது, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆளும் பாஜக கூட்டணி அரசின் இந்த முடிவு, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய இஸ்லாமிய சமூகம் முன்னேற வேண்டிய வாய்ப்புகளை மோசமாக குறைத்துவிடும்.

'அனைவருக்கும் சமவாய்ப்பு' என்ற கொள்கையை முன்வைக்கும் அரசு, சிறுபான்மையினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அதற்கு பதிலாக, பழைய அரசாணையை ரத்து செய்வது சமூக ஒற்றுமைக்கும், அரசியல் நம்பிக்கைக்கும் பாதிப்பை உண்டாக்கும்.

எனவே, இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்து, அரசியல் காரணங்களைத் தாண்டி சமூகநீதியை முன்னிறுத்தும் வகையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் இவ்வாறான முடிவு எடுத்திருப்பது சிறுபான்மை மக்களின் மீது பாஜகவினருக்கு உள்ள அப்பட்டமான வெறுப்புணர்வைக் காட்டுகிறது. சமூக ஒற்றுமை, சமத்துவம், மற்றும் அரசியல் நம்பிக்கையை காக்கும் பொறுப்பு அரசுக்கு இருப்பதை நினைவூட்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.