தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி: 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 6 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. அதன்படி நாளை (வியாழக் கிழமை) முதல் 28-ந்தேதி வரை செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (எண்:16848) விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வந்து மயிலாடுதுறைக்கு செல்லும்.

இதுபோல் நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் (எண்:16352) நாளை (வியாழக்கிழமை) விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து மும்பை செல்லும்.

மேலும் கன்னியாகுமரி-ஹவுரா அதிவிரைவு ரெயில் (எண்:12666)28-ந்தேதி (சனிக்கிழமை) இதே வழியில் செல்லும் மேலும் குருவாயூரில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி வரையும் இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:16128) மானாமதுரை வழியாக திருச்சிக்கு இயக்கப்படுகிறது.

அதுபோல் கன்னியாகுமரியில் இருந்து 27-ந்தேதி காலை 5.15 மணிக்கு ஐதராபாத் புறப்படும் சிறப்பு ரெயில் (எண்:07229) விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை 11.35 மணிக்கு புறப்படும் திருச்சி இன்டர்சிட்டி (எண்:22628) விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக மதுரை வந்து திருச்சிக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.