தீ விபத்து 
தமிழக செய்திகள்

மெக்கானிக் கடையில் பயங்கர தீ விபத்து: 3 கார்கள் எரிந்து சேதம்

கார் ஒன்றில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பி, அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள கார் மெக்கானிக் கடை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த சொகுசு எஸ்யுவி கார் உட்பட 3 கார்கள் தீயில் கருகி சாம்பலாகின.

தீ விபத்து

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கார் மெக்கானிக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மெக்கானிக் ஷெட்டில், வழக்கம்போல் பல வாகனங்கள் பழுதுபார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை அங்கிருந்த கார் ஒன்றில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பி, அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது.

கார் தீயில் கருகி சேதம்

அருகில் இருந்த மற்ற வாகனங்களுக்கும் தீ பரவியதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு எஸ்யுவி கார் ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் 2 கார்கள் பலத்த சேதமடைந்தன. விபத்து நடந்த நேரத்தில் கடையில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT